அலைகளின் வளைவுகளிலும் வெண்ணறை நுறைகளிலும் மனம் களித்து தொலைந்திருந்தேன் கடல் 'கொள்ளை' அழகு!
உள்ளத்தில் தானே ஒளித்து வைத்தேன் கண்களில் எங்ஙனம் கண்டுபிடித்தாய் காதலை!
பற்றி எரியும் கானகத்தில் பட்டாம்பூச்சி தான் காணுமோ! கோபம் குடிகொண்ட உள்ளத்தில் மகிழ்ச்சிதான் தோன்றுமோ?
முப்பாட்டன் காலம் தொட்டு அந்நிலமே அவர்கள் முகவரி முதல் நாள் செல்வந்தன் செழிநிலம் வந்தான் மறுநாள் 'ஆக்கிரமிப்பாளர்கள்' அகற்றப்பட்டனர்!
'இலவசக் கலவி' பிழையுடன் விளம்பரப் பலகை பொறுக்க முடியா பறவை தன் எச்சத்தால் புள்ளியிட்டது!
வீழ்ந்தேன், அழுது கொட்டினேன்; அதென்ன அவமானமா? நானும் அழகுதான் அந்த அருவி போல!
தோல்வியை முகவரி ஆக்கிக் கொள்; ஒரு நாள் நிச்சயம் வெற்றி உன் வீடு தேடி வரும்!
விடிய விடிய எரிந்த கொசு விரட்டி அரை மயக்க உறக்கத்தில் குடும்பம் குதூகலமாய் அவர்கள் இரத்தம் ருசித்தது கொசுக்கள்!
"கடவுளே, சாகா வரம் வேண்டும் எனக்கு" வெட்டப்படும் மரத்தின் கடைசி வேண்டுதல் மறுபிறவி பெற்றது புத்தகமாக!