"நேற்றிரவு கோரைப்பாயில் படுத்தாயா? கன்னத்தில் இத்தனை கோடுகள்!" அக்கறையாய் விசாரித்த தோழியிடம் எப்படி சொல்வேன் அவை உன் உதட்டு வரிகளின் தடமென்று!
அலைகளின் வளைவுகளிலும் வெண்ணறை நுறைகளிலும் மனம் களித்து தொலைந்திருந்தேன் கடல் 'கொள்ளை' அழகு!
உள்ளத்தில் தானே ஒளித்து வைத்தேன் கண்களில் எங்ஙனம் கண்டுபிடித்தாய் காதலை!
ஆயிரம் முறை தாண்டி போகிறாயே, ஒரு முறை தீண்டி போனால் தான் என்ன? ஒரு தலை காதலின் மௌன கெஞ்சல்!
கரும்பாறைகள் தாம்; கல்நெஞ்சங்கள் தாம்; ஆயினும் மலைகளை உச்சி முகர்ந்து முத்தமிடும் முகில்கள்!
விழுவது வீழ்ச்சியெனில் அருவிகள் ஆர்ப்பரிக்குமோ? இழப்பது இகழ்ச்சியெனில் இளவேனிற் இலைகள் துளிர்க்குமோ? அழுவது அசிங்கமெனில் பிறந்த குழந்தை கொண்டாடப்படுமோ? தோல்விகள் முடிவெனில் வெற்றிகள் தான் வேரூன்றுமோ?!
முப்பாட்டன் காலம் தொட்டு அந்நிலமே அவர்கள் முகவரி முதல் நாள் செல்வந்தன் செழிநிலம் வந்தான் மறுநாள் 'ஆக்கிரமிப்பாளர்கள்' அகற்றப்பட்டனர்!