மகளிர்தின நன்றிகள்
ஆண் நெடில் என்றும்
பெண் குறில் என்றும்
குறுகிய மனதோடு
அருமைப் பெண்களை
சிறுமைப் படுத்தி
ஆண்கள் பலர்
ஆண்டுகள் பல
ஆண்டு வந்தனர்..
ஆனால் அவர்களுள் ஒருவன்
பெண்ணெழுச்சிக்காகவும்
பெண்ணுரிமைக்காகவும்
வேட்கை கொண்டான்; வெகுண்டெழுந்தான்;
வீரப் பாடல்கள் முழங்கினான்..
புதுமைப் பெண்களை படைத்த பாரதியே..
இன்று நீ இருந்திருந்தால்
பெரும் பெருமை கொண்டிருப்பாய்..
சோதனைகள் பல சூழ்ந்தாலும்
உழன்று இராமல் சுழன்று ஓடி
சாதனைகளை சாத்தியமாக்கி
ஒரு நூறாண்டாய் உன் கனவை
நனவாக்கிய பெண்களை
கண்டு மட்டுமல்ல..
“என் மகள் மேலே படிப்பாள்” என்று
மீசை முறுக்கிய தந்தை..
“என் சகோதரி வண்டி ஓட்டுவாள்” என்று
கற்றுக்கொடுத்த சகோதரன்..
“உன்னாலும் முடியும் தோழி” என்று
உந்துதலாய் இருந்த தோழன்..
“அவள் வேலை.. அவள் அடையாளம்!” என்று
வழிகொடுத்து வாழ்த்திய கணவன்..
“உன் விருப்பம் செய்; நான் துணை” என்று ஊக்கமளித்த மகன்..
இவ்வாறு கலங்கிய பெண்களுக்கு
கலங்கரை விளக்கமாய் விளங்கி
மரபுகளை உடைத்த மகளிருக்கு
அரணாய் ஆதரவாய் உறுதியாய்
உறுதுணையாய் இருக்கும்
உன்னத ஆண்களை பார்த்து..!
புதுமைப் பெண்கள் அனைவருக்கும்
மனமார்ந்த மகளிர்தின வாழ்த்துக்கள்..!
நாங்கள் இன்று கொண்டாட
நித்தமும் புரிந்த உதவியை மறைத்து
சத்தமின்றி சிரிக்கும் ஆண்களுக்கு கோடான கோடி நன்றிகள்..!
~ ஆதிலா நபின்
Discussion about this post