குரோதம் – குருதி – கொலை
விரோதம் – வெறுப்பு – வெறி
இவ்வார்த்தைகளின் அர்த்தம் அறியா வாழ்ந்திருந்தேன்..
என் வாழ்க்கைக்கும் மறவா பொருளை புத்திக்கு புகட்டி விட்டீர்!
தீக்கிரையான வீட்டினுள் தேடி எடுத்தேன்
பாதி எரிந்த பாட அறிக்கை அட்டையை..
முதல் மதிப்பெண்ணுக்கு முத்தமிட்டு ஒப்பமிட்ட
என் தந்தை மூச்சில்லா பிண்டமாய்..
என் தாய் அதிர்ச்சியில் மூர்ச்சையாய்..
நேற்றுவரை பள்ளிக்கு
முகம்மதுவும் மோசஸும்
கிருஷ்ணனும் கணேசனும்
ஒன்றாய் சென்றோமே..!
இனி சென்றாலும் ஒன்றாவோமா?
நீங்கள் கொளுத்தியது கடையை மட்டுமல்ல;
எங்கள் பல வருட கனவை..
நீங்கள் உடைத்தது உடைமையை மட்டுமல்ல;
எங்கள் களைப்பில்லா உழைப்பை..
நீங்கள் கொன்றது என் தந்தையை மட்டுமல்ல;
என் எதிர்காலத்தை..!
~ஆதிலா நபின்
Discussion about this post