குறள் # 333
பால்: அறத்துப்பால்
அதிகாரம்: நிலையாமை (Instability)
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.
விளக்கம்:
செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.
Translation:
Unenduring is all wealth; if you wealth enjoy,
Enduring works in working wealth straightway employ.
Explanation:
Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable.
Transliteration:
aRkaa iyalpitruch selvam adhupetraal
aRkupa aangae seyal
முன்னொரு காலத்தில், ஒரு கிராமத்தில் இளங்கோவன், மாதவன் என்ற இரு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். அந்த ஊரில் வேலை சரியாக இல்லாததால் பக்கத்துக்கு நகருக்கு வேலை தேட ஒரு நாள் காட்டு வழி சென்றனர். இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால் எங்காவது தங்கிவிட்டு மறுநாள் காலை விடிந்ததும் பயணத்தை தொடரலாம் என்று நினைத்தனர். சற்று தூரத்தில் பௌர்ணமி நிலவொளியில் சில கற்சிலைகளை கண்டனர். காட்டுக்குள் சிற்பி இருப்பார் போலும் என நினைத்து சிலைகளை தொடர்ந்து சென்றனர். அங்கு ஒரு சிறிய குடிசையில் வயதான முதியவர் ஒருவர் இருந்தார். இவர்களைக் கண்ட அவர் புன்முறுவலுடன் வரவேற்றார். இருவருக்கும் இரவு உணவு அளித்தார். மாதவனும் இளங்கோவனும் தாங்கள் சரியான வேலை வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதால் தங்கள் குடும்பத்தை விட்டு பக்கத்து நகருக்குப் பிழைப்பு தேடி செல்வதாகக் கூறினர். அதைக்கேட்டு இரக்கமுற்ற முதியவர் இருவரிடமும் பணப்பையைகளைக் கொடுத்தார். அதைப் பிரித்த பார்த்தவர்களுக்கு பயங்கர ஆச்சரியமும் சந்தோஷமும். உள்ளே தலா ஆயிரம் பொற்காசுகள் இருந்தன. பொழுது விடிந்ததும் இருவரும் முதியவரிடம் நன்றி கூறி புறப்படத் தயாராகினர். அப்போது அவர் “செல்வம் நிலையானதல்ல, உங்கள் வாழ்க்கையும் தான். விதியை மதியால் வெல்லுங்கள்” என்று கூறி வழியனுப்பினார்.
தங்கள் ஊருக்கு திரும்ப வந்த இளங்கோவனும் மாதவனும் இவ்வளவு செல்வத்தை வைத்து என்ன செய்வது என்று யோசித்தனர். இளங்கோவன் அந்த பொற்காசுகளை வைத்து பெரிய மாளிகை ஒன்றினை வாங்கி அவன் தன் குடும்பத்தினருடன் பல வேலையாட்கள் வைத்துக்கொண்டு மிகவும் ஆடம்பரமாக வாழத் தொடங்கினர். ஆனால் மாதவனுக்கோ அந்த முதியவர் கூறிய வார்த்தைகள் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தன. அதனால் அவன் ஊரில் சில வியாபாரங்களை தொடங்கி தன்னைப்போல் வேலை இல்லாதவர்களை பணி அமர்த்தினான். மேலும் கஷ்டப்படுபவர்களுக்கு உதவினான். விரைவிலேயே வியாபாரங்கள் செழிப்படைந்தது.
இதற்கிடையில் மாதவன் பலமுறை அறிவுரை கூறியும் இளங்கோவன் ஆடம்பர வாழ்க்கையை தொடர்ந்தான். கொஞ்சம் கொஞ்சமாய் இளங்கோவனின் பணம் கரையத் தொடங்கியது. மாதவன் ஊரில் நல்ல காரியங்களுக்கும் கஷ்டப்படுபவர்களுக்கும் பணம் கொடுத்ததால் அனைவரும் மாதவனை போற்றினர். அதனால் அவன் புகழ் மேலும் பரவியது. மாதவனின் செல்வத்தையும் நற்பெயரையும் கண்ட இளங்கோவன் பொறாமை கொண்டான். எப்படியாவது அவனை கெடுக்க வேண்டும் என்று நினைத்தான். ஒரு இரவு, சில திருடர்களை வைத்து மாதவனின் கடைகளிலும் வீட்டிலும் உள்ள செல்வத்தை திருட செய்தான்.
மாதவனின் துரதிஷ்டம், அன்று முதியவர் பொற்காசுகள் கொடுத்து சரியாக 12 பவுர்ணமி திங்கள்கள் ஆகி இருந்தன. அந்த முதியவர் உண்மையிலேயே ஒரு மந்திரவாதி. எப்பொழுதும் அவர் தன் குடிலுக்கு வருபவர்களிடம் இதேபோல் பணம் கொடுத்து பன்னிரண்டு
திங்கள்கள் கழித்து, பணத்தை திரும்பப் பெற வருவார். அவரிடம் பணம் திருப்பி கொடுக்க முடியாதவர்களை சிலையாக மாற்றி காட்டுக்குள் கொண்டு செல்வார்.
முதலில் இளங்கோவனிடம் சென்றார் அந்த மந்திரவாதி முதியவர். பணத்தைத் திருப்பிக் கேட்டதும் இளங்கோவன் கொடுக்க மறுத்தான். முதியவர் “பணம் இல்லையேல் சிலையாகி விடுவாய்” என்று மிரட்டியதும் மாதவனிடம் இருந்து தான் திருடிய பணத்தை முதியவரிடம் கொடுத்தான். அதை வாங்கிக் கொண்ட முதியவர் பணத்தையும் இளங்கோவனையும் மாறி மாறிப் பார்த்தார். சத்தமாக சிரித்து விட்டு புறப்பட்டார்.
பின் மாதவனிடம் வந்து அதே போல் பணத்தை திரும்பக் கேட்டார். ஏற்கனவே செல்வம் திருட்டு போயிருந்த சோகத்தில் இருந்த மாதவனுக்கு அது மேலும் அதிர்ச்சியாக இருந்தது. தன் நிலையை முதியவரிடம் எடுத்துக் கூறினான். ஆனால் முதியவரோ தன் ஊன்றுகோலால் மாதவன் காலில் தட்டினார். மாதவன் கால் முதல் தலைவரை சிலையாகத் தொடங்கினான். விஷயம் அறிந்த ஊர் மக்கள் தங்களிடம் இருந்த பணத்தை திரட்டிக் கொண்டு வந்து முதியவரின் முன் இட்டு “மாதவன் மிகவும் நல்லவர். எங்கள் இளைஞர்களுக்கு வேலை கொடுத்தார். எங்களுக்கு கஷ்டம் வந்தபோதெல்லாம் உதவினார். தயவு செய்து இந்த பணத்தை எடுத்துக் கொண்டு அவரை விட்டு விடுங்கள்” என்று கெஞ்சினர். அதற்குள் மாதவன் கழுத்துவரை கற்சிலை ஆகிவிட்டான். மேலும் சில ஊர் மக்கள் திரண்டு முதியவரிடம் முறையிட்டனர்.
அப்போது முதியவர் தன் ஊன்றுகோல் தன் அருகில் மூன்று முறை தட்டினார். உடனே அங்கே இளங்கோவனின் ஆளுயர சிலை தோன்றியது. அதைக் கண்ட அனைவரும் ஆச்சரியமும் குழப்பமும் கொண்டனர். அப்போது முதியவர் “இளங்கோவனின் வீடு சென்று அவனிடமிருந்து பணத்தை வாங்கியபோதே அது அவன் உடையது அல்ல என்பதை தெரிந்து கொண்டேன். மாதவனின் நல் குணத்தையும் நற்பண்பையும் காணவே இங்கு வந்து அவனை சிலையாக்க முனைந்தேன். உங்கள் அன்பையும் மதிப்பையும் கொண்ட மாதவனைக்கண்டு நான் பெருமை கொண்டேன். மேலும் பணத்தை பெற்றவுடன் ஆடம்பரமாக வாழ்ந்த, பேராசை கொண்டு மாதவனிடம் செல்வத்தை திருடிய இளங்கோவன் என்றும் கற்சிலையை என்னுடன் காட்டில் இருப்பான்” என்று கூறிவிட்டேன் மாதவனை பழைய நிலைமைக்கு மாற்றி அவனிடமிருந்த திருடுபோன செல்வத்தை திரும்பக் கொடுத்து அவனை ஆசீர்வதித்தார்.
முதியவருக்கும் ஊர் மக்களுக்கும் நன்றியுரைத்த மாதவன் “தயவுசெய்து இளங்கோவனை பழைய நிலைமைக்கு மாற்றுங்கள்” என்று வேண்டினான். “இளங்கோவன் இனிமேல் நல்லவனாய் வாழ நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று உறுதியளித்தான். சற்று யோசனைக்குப் பிறகு, இளங்கோவனை பழைய நிலைமைக்கு மாற்றினார். தன் தவறை உணர்ந்த இளங்கோவன் “ஐயா என்னை மன்னித்து விடுங்கள். செல்வம் என்றுமே நிலையானது அல்ல என்பதை நான் புரிந்து கொண்டேன். இனிமேல் நல்வழியில் உழைத்து செல்வத்தை அறவழியில் செலவழிப்பேன்” என்று கூறினான். மேலும் மாதவனிடம் மன்னிப்பு கேட்டு இருவரும் நண்பர்களாக நல்லவிதமாக வாழ்ந்தனர்.
என்ன குழந்தைகளா, இக்கதையில் இருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள்? செல்வம் நிலையானது அல்ல. நமக்கு செல்வம் கிடைக்கும்போது அதனைக் கொண்டு பெருமை கொள்ளாது ஆடம்பரம் இல்லாது நம்மால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்து தேவையான அளவு பணத்தை சேமித்து நல்ல வழியில் செலவழிக்க வேண்டும். நாம் செய்யும் அறமும் அருளும் நம்மை காக்கும்.
இக்கதையை குழந்தைகள் கேட்டு மகிழ
Discussion about this post