அதிகாரம் 21: தீவினையச்சம் (Dread of Evil Deeds)
குறள் எண்: 205
இலனென்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றுப் பெயர்த்து
வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்
Translation:
Make not thy poverty a plea for ill;
Thy evil deeds will make thee poorer still.
Meaning:
Commit not evil, saying, “I am poor”: if you do, you will become poorer still.
Transliteration:
ilan-endru theeyavai seyyaRka seyyin
ilanaakum matrum peyarththu
ஒரு ஊரில் மங்கம்மா என்ற பெண் தன் மகன் மற்றும் இரு பெண் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார். இளம் வயதிலேயே கணவன் இறந்து விட்டதால் குழந்தைகளை வளர்க்க ஒரு பெரிய பணக்காரர் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். கடுமையான உழைப்பாளியான அவர் விடுமுறை நாட்களில் தன் பையன் பூபதியையும் அழைத்துச் செல்வார். அவனும் தன்னால் இயன்ற உதவிகளை தன் தாய்க்கு செய்வான். ஆனாலும் கூலி அவர்களின் சாப்பாட்டிற்கும் படிப்புக்குமே போதுமாக இருந்தது.
கிட்டத்தட்ட 20 வருடங்கள் மங்கம்மா அந்த வீட்டில் வேலை செய்து வந்தார். அதனால் அந்த பணக்காரருக்கும் அவரது மனைவிக்கும் பூபதியை மிகவும் பரிட்சயம். மங்கம்மாவின் உழைப்பை பார்த்து பூபதியுடைய கல்லூரி படிப்பு செலவை தாங்களே ஏற்றுக் கொண்டனர். அத்தோடு பூபதியை மிகவும் நம்பி அவர்கள் கடைகளில் பண பரிவர்த்தனையை பார்த்துக் கொள்ளுமாறு ஒப்படைத்தனர்.
ஆரம்பத்தில் பூபதி தனது வேலையை கண்ணும் கருத்துமாக செய்து வந்தான். இருப்பினும் அதிக பணப்புழக்கத்தை கண்ட அவன் மனதில் ஒரு கெட்ட எண்ணம் தோன்றியது. நாம் தான் ஏழையாக இருக்கிறோம்; இவர்கள் பெரிய பணக்காரர்கள் தானே; அவர்களுக்கு தெரியாமல் கொஞ்சம் பணம் எடுத்துக் கொண்டால் நாமும் ஏதாவது சிறு தொழில் தொடங்கி தனியாக சம்பாதிக்கலாம் என்று நினைத்தான். முதலில் 50, 100 என்று கையாடல் செய்த அவன் சில வாரங்களில் 500, 1000 என்று திருட ஆரம்பித்தான்.
ஆனாலும் அந்த பணத்தை எந்த தொழிலில் போட்டாலும் நஷ்டத்திலேயே முடிந்தது. இதற்கிடையில் அவன் கையில் பணத்தைப் பார்த்த அவன் அம்மா மங்கம்மாவுக்கு அவன் மீது சந்தேகம் வந்தது. பூபதியிடம் பலமுறை அறிவுரை கூறினார், எச்சரித்தார். ‘உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணக்கூடாது’ என்று எவ்வளவோ எடுத்துரைத்தாள். இருப்பினும் பூபதி கேட்பதாக இல்லை. பணத்தாசை அவன் கண்ணை மறைத்தது. பத்தாததற்கு தாம் ஏழைகள் தானே, பணக்காரர்களிடம் சிறிது எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு ஒன்றும் குறைந்து விடாது என்று தனக்குத்தானே சமாதானம் கூறிக் கொண்டான்.
இப்படியாக மாதங்கள் சென்றது. பூபதியும் கல்லூரி கடைசி ஆண்டு வந்துவிட்டான். மங்கம்மாவுக்கோ மனம் குறுகுறுத்தது. இருந்தாலும் மகனை காட்டிக் கொடுக்கவும் மனம் இடம் கொடுக்கவில்லை. பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் தானே? ஒரு நாள் பணக்காரர் கணக்கு வழக்குகளை சரி பார்க்கும் போது, பூபதி திருடுவதை கண்டுபிடித்து விட்டார். பொறுமையாக அவனை கண்காணித்து கையும் களவுமாக பிடித்து விட்டார். நம்பிக்கை துரோகம் செய்த அவன் மீது கடும் கோபம் கொண்டார்.
உடனே பூபதியின் கல்லூரி செலவை ஏற்க மாட்டேன் என்று கூறி அவனது பாவ செயலுக்கு துணையாக இருந்ததாக மங்கம்மாவையும் வேலையை விட்டு அனுப்பினார். இருந்த வேலையும் இழந்து, கல்லூரி படிப்பையும் தொடர முடியாமல் மங்கம்மாவும் பூபதியும் மேலும் கஷ்டப்பட்டனர். ஒருவேளை உணவிற்கே திண்டாடினர். ஊரிலும் அவர்களுக்கு கெட்ட பெயர். யாருமே அவர்களை நம்பி வேலை கொடுக்க தயாராக இல்லை. அதனால் மேன்மேலும் வறுமையில் வாடினர். தன் சொல் பேச்சை கேட்காததால் தான் இத்தனை கஷ்டமும் என்று மங்கம்மாவும் பூபதியிடம் பேசுவதை நிறுத்தினார்.
பூபதி தன் தவறை உணர்ந்தான். திருந்தி வாழ முடிவு கொண்டான். பணக்காரரிடம் கெஞ்சி கூத்தாடி தன்னை மன்னிக்கும் படியும் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கும்படியும் மன்றாடினான். முதலில் மனம் இறங்காத பணக்காரர், அவனின் தொடர் வேண்டுகோளுக்கு செவி சாய்த்தார். இம்முறை பூபதி எந்த ஒரு தவறும் செய்யாமல் மிகவும் நேர்மையாக உழைத்தான். இழந்த நம்பிக்கையை மீண்டும் பெற்றான்.
பணக்காரரும் அவரது மனைவியும் மங்கம்மாவை மறுபடியும் வேலையில் சேர்த்துக் கொண்டனர். சில கடைகளின் பொறுப்பை பூபதியிடமே ஒப்படைத்தனர். பூபதி பொறுப்பாக வேலை செய்து லாபம் கிடைக்கும் படி செய்தான். பின் தன் கல்லூரி படிப்பை தன் சொந்த செலவிலேயே தொடர்ந்தான். தன் தங்கைகளையும் நன்றாக படிக்க வைத்தான். மங்கம்மா பூபதி குடும்பம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தது.
ஆகவே குழந்தைகளா நமக்கு ஏதேனும் ஒரு கஷ்டம் இருந்தால் அதை காரணம் காட்டி தவறு செய்யக்கூடாது. உதாரணத்திற்கு ஒரு பரீட்சைக்கு முன்னதாக உடம்பு சரியில்லாமல் போய்விட்டது, அதனால் நீங்கள் சரியாக படிக்கவில்லை. அதற்காக பரிட்சையில் பக்கத்தில் இருப்பவரை பார்த்து எழுத கூடாது. எனக்கு உடம்பு சரியில்லாததால் படிக்க முடியவில்லை பார்த்து எழுதினேன் என்று நியாயம் கூறக்கூடாது. வாழ்க்கையில் என்ன கஷ்டம் வந்தாலும் எந்த சந்தர்ப்பத்திலும் தவறு செய்யாமல் நேர்மையாகவும் உண்மையாகவும் வாழ்ந்தால் நிச்சயமாக கஷ்ட காலம் நீங்கி சந்தோஷம் நிலைக்கும்.
குழந்தைகள் இக்கதையை கேட்டு மகிழ:
Discussion about this post