குறள் # 127
அதிகாரம் : அடக்கமுடைமை (The Possession of Self)
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
பொருள்:
எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.
Translation:
Whate’er they fail to guard, o’er lips men guard should keep;
If not, through fault of tongue, they bitter tears shall weep..
Meaning:
Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue.
Transliteration:
Yaakaavaa Raayinum Naakaakka Kaavaakkaal
Sokaappar Sollizhukkup Pattu
வாயாடி பைரவி
முன்னொரு காலத்தில் ஒரு பெரிய தேசம் ஒன்றினை ராஜா ரவிவர்மன் தன் ராணி தேவிப்பிரியாவுடன் சிறந்த முறையில் ஆட்சி செய்து வந்தார். அவர்களுடைய ஒரே செல்ல மகள் சிந்து. அவளுடைய நெருங்கிய தோழி தான் பைரவி. சிந்து பைரவி என்றால் தலைநகரில் உள்ள அனைவருக்கும் தெரியும். அவர்கள் அவ்வளவு நெருக்கமானவர்கள். ஆனால் ராணி தேவிப்பிரியாவிற்கு பைரவியை அவ்வளவாக பிடிக்காது. காரணம் பைரவி சரியான வாயாடி, சில சமயங்களில் பெரியவர்கள் என்று கூட பாராமல் எதிர்த்து பேசுவாள். மேலும் தான் ஏதோ இளவரசி போல நினைத்துக்கொண்டு கர்வமாக பிறரை மதிக்காமல் நடந்தாள்.
கடைத்தெருவில் அவள் கேட்கும் பொருட்களை கேட்கும் விலையில் கொடுக்காவிட்டால் கடைக்காரர்களை மிரட்டுவாள் “நான் யார் தெரியும் இல்லையா? நான் நினைத்தால் அரசரிடம் சொல்லி உங்கள் கடையை காலி செய்து விடுவேன்!” என்று கூறுவாள். இளவரசியின் நெருங்கிய தோழி என்பதால் யாரும் பைரவியை கண்டிப்பதில்லை. அதனால் பைரவி இன்னும் அதிகமாக பேசினாள்.
ஒரு நாள், பக்கத்து நாட்டு மன்னன், ராணி தேவிப்பிரியாவையும் இளவரசி சிந்துவையும் சிறை பிடிக்கவும், தன் நாட்டின் மீது போர் தொடுக்க திட்டமிட்டு இருப்பதையும் ஒற்றன் மூலம் அறிந்தான் ராஜா ரவிவர்மன். அதனால் அவசரம் அவசரமாக ராணியும் இளவரசியையும் ஒரு ரகசியமான பாதுகாப்பான இடத்திற்கு அனுப்ப வீரர்களை அனுப்பினார். அப்போது சிந்துவும் பைரவியும் விளையாடிக்கொண்டிருந்தனர். வீரர்கள் சிந்துவை அழைத்துச் சென்ற போது பைரவி “எங்கே செல்கிறாய்?” என்று கேட்டாள். அதற்கு இளவரசி “அது ராஜ ரகசியம். யாரிடமும் சொல்லக்கூடாது” என்றாள். ஆனால் பைரவி வற்புறுத்திக் கேட்கவே யாரிடமும் சொல்ல கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டு சிந்து ரகசிய இடத்திற்கு செல்லும் வழியை பைரவியிடம் கூறிவிட்டு கிளம்பினாள்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் அன்றைக்கே போர் தொடுத்தான் பக்கத்து நாட்டு அரசன். ராஜா ரவிவர்மன் போர்க்களத்தில் வெற்றிகரமாக போர் செய்து கொண்டிருந்த பொழுது பக்கத்து நாட்டு அரசன் வீரர்களை மாறுவேடத்தில் அரண்மனைக்கு அனுப்பி ராணியையும் இளவரசியையும் பிடித்து வர சொன்னான். ஆனால் ராணியும் இளவரசியும் ரகசியமான இடத்தில் வைக்கப் பட்டுள்ளனர் என்பதை அறிந்தனர் பக்கத்து நாட்டு வீரர்கள். மெதுவாக கடைத்தருவில் விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு கடைக்காரர் பைரவியை பற்றி கூறினார். அவளுக்கு தான் இளவரசியைப் பற்றி பலவும் தெரியும் என்று கூறினர். அப்போது எதேச்சையாக பைரவியும் அந்த கடைக்கு வந்தாள்.
பக்கத்து நாட்டு வீரர்கள் மெதுவாக பைரவியிடம் பேச்சு கொடுத்தனர். முன்பின் தெரியாதவர்கள் என்று கூட பாராமல் உடனே தற்பெருமை பேச ஆரம்பித்துவிட்டாள் பைரவி. தானும் இளவரசி சிந்துவும் எவ்வளவு நெருக்கம் என்றும், தான் என்ன சொன்னாலும் அரசரே செய்வார் என்றும் உரக்கக் கூறினாள். இவள் தான் சரியான ஆள் என்று நினைத்த எதிரி நாட்டு வீரர்கள் அவளிடம் “ஆனால் ராணியும் இளவரசியும் தற்போது அரண்மனையில் இல்லையே. ஏதோ ரகசிய இடத்தில் தங்கி இருக்கின்றனர். அது யாருக்கும் தெரியாது. என்னதான் நெருங்கிய தோழியாக இருந்தாலும் உனக்கும் அது தெரியாது” என்று கேலி செய்வதுபோல் கூறினர். உடனே பைரவி கோபமாக “யார் சொன்னார்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும்” என்றாள். சுதாகரித்த எதிரி நாட்டு வீரர்கள் “சும்மா உளறாதே. அரண்மனை ரகசியங்கள் சாதாரண மக்களுக்கு தெரியவே தெரியாது” என்று அவளது வாயை நோண்டினர். அதற்கு பைரவி “நான் ஒன்றும் சாதாரணமானவள் கிடையாது. ராணியும் இளவரசியும் சுரங்கம் வழியாக அரண்மனைக்கு கிழக்கே இருக்கும் காட்டில் உள்ள குகையில் பாதுகாப்பாக இருக்கின்றனர்” என்று கடைத் தெருவில் வைத்து சத்தமாக கூறிவிட்டாள்.
உடனே எதிரி நாட்டு வீரர்கள் விரைந்து சென்று குகையை அடைந்து அரசியையும் இளவரசியும் சிறைபிடித்தனர். மக்கள் அனைவரும் பைரவியை திட்டி தீர்த்தனர். அவள் நாவடக்கத்துடன் நடந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது என்று கூறினர். நடந்ததைக் கேள்விப்பட்டு கடும் கோபமுற்ற அரசரும் கடுமையாகப் போரிட்டு மூன்றாம் நாள் முடிவில் வெற்றி வாகை சூடினார். அத்தோடு ராணியையும் இளவரசியையும் மீட்டு வந்தார். பைரவி விசாரணைக்காக அரண்மனைக்கு அழைக்கப்பட்டாள். அவையில் அனைவர் முன்பும் கூனிக் குறுகி நின்றாள் பைரவி.
விசாரணையின்போது நடந்தவை அனைத்தையும் அறிந்தார் அரசர். அப்போது அரசரின் பெயரை உபயோகித்து இதற்கு முன் அவள் அனைவரையும் எதிர்த்துப் பேசியதைக் கேட்டு மேலும் கோபம் கொண்டார். பைரவியை நோக்கி அரசர் “எனது மகள் சிந்துவைப் போல உன் மேலும் பாசமாக இருந்தேன். அப்படி ஒரு இடத்தில் உன்னை வைத்த போது நீ அதற்கு ஏற்றால் போல் நடக்கவில்லை. யாராக இருப்பினும் நாவடக்கம் மிக அவசியம். நீ உன் நாவினை அடக்காமல் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசியதால் வந்த ஆபத்தை பார்த்தாயா. ஆகவே உன்னை நாடுகடத்த ஆணையிடுகிறேன்” என்று கர்ஜித்தார்.
இதை கேட்டு அதிர்ந்த பைரவி “நான் செய்தது தவறுதான் அரசே. என்னை தயவு செய்து மன்னியுங்கள். இனிமேல் நான் நாவடக்கத்துடன் அனைவரிடமும் மரியாதையாகவும் இனிமையாகவும் பேசுவேன்” என்று அழுதாள். அவள் மேல் இரக்கம் கொண்ட அரசர் “சரி, இனிமேல் நீ திருந்தி வாழ்வாய் என்று நம்புகிறேன். நாட்டினுள் இருந்து கொள் ஆனால் அரண்மனைக்குள் வர உனக்கு அனுமதி இல்லை” என்றார் அரசர். வருத்தத்துடன் தன் வீட்டிற்கு சென்றாள் பைரவி.
என்ன குழந்தைகளா, பைரவியின் கதையை கேட்டீர்களா. அவள் தன் நாவினை அடக்காததால் வீணான பிரச்சனையில் சிக்கி, தன் நெருங்கிய தோழிக்கு ஆபத்தை விளைவித்து, தனக்கு இருந்த நல்ல இடத்தையும் பெயரையும் கெடுத்துக் கொண்டாள். அடுத்தவர்களின் சொல் பேச்சுக்கும், பழிக்கும் ஆளானாள். ஆகவே நாம் யாராக இருந்தாலும் எப்பொழுதும் அடக்கமாக பேச வேண்டும். இல்லாவிட்டால் நாம் சொல்லிய சொல்லே நமக்கு துன்பம் உண்டாக்கும்.
குழந்தைகள் இக்கதையை கேட்டு மகிழ
https://anchor.fm/athila-nabin/episodes/–eonsdf
.
Discussion about this post