“மார்ச் 8, 2024 – மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி”
மின்னஞ்சல் மின்னியதும்
மகிழ்ச்சியில் நிகழ்ச்சி
நிகழிடம் சென்று முன்னமர்ந்தேன்.
கருவிழிகள் வாசல் வசம் தவம்;
காரணம் வரவிருக்கும் சிறப்பு விருந்தினர்கள்.
ஆசிரியர், கவிஞர், பெண்ணியவாதி, சமதர்மவாதி
என அடைமொழிகள் புடைசூழ்
வீரமகள் சுகிர்தராணி.
அழகும் அறிவும் சங்கமமாய்
குயிலோசையில் சிங்கக்கர்ஜனை
அதிசயமாய்
செறிவுடன் செய்தி தொகுக்கும் அபிநயா சுப்ரமணியன்.
பால்யம் முதலே தமிழ்த்தாயின்
பாலமுதம் பருகி
வாய்ப்புகளின் கதவுகளை உரக்கத்தட்டி
தடைக்கற்களை படிக்கற்களாய் தாண்டி
தங்கச் சிலையாய் தகித்திட
தந்தையால் சிரத்தையோடு செதுக்கப்பட்டு
இன்று வெற்றிகள் அவர் கால் தடம் தேட
கண்நிறை கனவோடு விண்நோக்கும் பெண்டிரின்
நம்பிக்கை நட்சத்திரம் அபிநயா!
ஆதிகாலம் தொட்டு
ஆண்ட்ராய்டு காலம் வரை
பெண்கள் மீது அடக்குமுறை;
அதன் எல்லை அவள் அடங்கும் வரை!
இன்னல் இடர்பாடிடும் இறுமாப்பு ஆடவர்க்கு
ஒறுநல் பதிலே ஒப்பில்லா உழைப்பு
என ஞான ஒளி வீசி சென்றார்.
அனுதினம் அயராது உழைக்கும்
அவளுக்கென்று ஏன் ஒரு தினம்?
அறிவுக்கண் திறக்க விரிவுரைத்தார் சுகிர்தராணி –
வரலாற்றின் வலிமிகு கணங்கள்
வலிமைமிகு தருணங்களாய் உருமாறிய கதைகளை.
பெண்குலத்தின் பெருமை கொல்ல
ஆண்களின் ஆயத்த அஸ்திரம்
வார்த்தை வன்முறை.
அருந்தமிழிலும் கருவறுக்கப்பட வேண்டும் அவ்வருவருக்கத்தக இழிச்சொற்கள் –
அரங்கமெங்கும் எதிரொலித்து அவரது வேட்கை முழக்கம்!
சாதிச்சாயம் பூசப்பட்டு
பின்னிருக்கையில் தனிமைப்படுத்தப்பட்டு
உற்ற நோவெல்லாம் உறுதியாய் மாற
கற்ற பள்ளியிலேயே ஆசு இரிய
தலை நிமிர்த்தி புதுமைகள் புகுத்தி
சரித்திரத்தை மாற்றும்
சகலகலா வல்லி சுகிர்தராணி!
இவ்விரு ஆற்றல் ஊற்றுகள்
கடந்து சென்ற முட்பாதை வலிகள்
விடியல் வேண்டும் வனிதைக்கெல்லாம் வழிகள்.
கண்கள் கலங்க
உள்ளம் உரமாக
தைரியங்கள் தளிர்த்திட
உரிமைகள் உணர
நம்பிக்கை நங்கூரமாக
புது மனுஷியாய் பூரித்தேன்!
மகளிர் தின வாழ்த்துக்களுடன் வணங்கி விடை பெற்றேன்!!
Discussion about this post