குறள் # 248
பால்: அறத்துப்பால்
அதிகாரம்: அருளுடைமை (Compassion)
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது
விளக்கம்:
பொருள் இழந்தவர்ளும் ஒரு காலத்தில் பொருள் வளம் அடைவார்கள்: அருள் இல்லாதவரோ அதை இழந்தால் வாழ்வை இழந்தவரே: மீண்டும் அடைதல் அரிது.
Translation:
Who lose the flower of wealth, when seasons change, again may bloom;
Who lose ‘benevolence’, lose all; nothing can change their doom.
Explanation:
Those who are without wealth may, at some future time, become prosperous; those who are destitute of kindness are utterly destitute; for them there is no change.
Transliteration:
poruLatraar pooppar orukaal aruLatraar
atraarmaR Raadhal aridhu
பெரும் செல்வந்தரான சுலைமான் சாஹிப் அவர்களுக்கு ஆமீர்கான் அயூப் கான் என்ற இரு மகன்கள் இருந்தனர். இருவரும் மிக செல்லமாக ஆடம்பரமாக வளர்ந்தனர். அதனால் தனக்குப் பின் தனது வியாபாரத்தை யார் சிறப்பாக கவனிப்பார்கள் என்று எண்ணினார் சுலைமான் சாஹிப். தனக்கும் வயதாகிக் கொண்டே போவதால் பொறுப்புக்களை ஒப்படைக்க இருவரில் யார் பொருத்தமானவர் என்பதை முடிவெடுக்க இருவருக்குள்ளும் ஒரு போட்டி வைக்க தீர்மானித்தார்.
அதன்படி ஒருநாள் தன்னுடைய இரு மகன்களையும் அழைத்து இருவர் கையிலும் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து “எனதருமை மகன்களே, நான் சிறு வயதிலிருந்து மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய இந்த வியாபாரத்தை எனது காலத்திற்கு பிறகு யார் சிறப்பாக செய்வார்கள் என்பதை கணிக்க உங்கள் இருவருக்கும் ஒரு போட்டி வைக்க முடிவு எடுத்துள்ளேன். உங்கள் இருவருக்கும் ஒரு வருட காலம் தருகிறேன். இருவரும் தூரதேசம் சென்று ஒரு வருடத்திற்குள் இந்த ஒரு லட்சத்தை 5 லட்சமாக கொண்டு வருபவரே இந்த பல கோடி சொத்துக்கும் அதிபதி. ஆனால் ஒரு நிபந்தனை. எந்த சூழ்நிலையிலும் என் பெயரை உபயோகிக்கக் கூடாது. யாருக்கும் நீங்கள் என்னுடைய மகன்கள் என்று கூறக் கூடாது. எந்தக் காரணத்திற்காகவும் என்னை தொடர்பு கொள்ளக் கூடாது ” என்றார். அவருடைய நிபந்தனைகளுக்கு ஒத்து கொண்டு இருவரும் வெவ்வேறு திசையில் சென்றனர்.
முதலில் ஆமிர் கான் ஒரு கிராமத்தை சென்றடைந்தான். இரவு நேரமாகி விட்டதால் அன்றிரவு அங்கு ஒரு தங்கும் விடுதியில் தங்கினான். அசதியில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது, திருடன் ஒருவன் அவனுடைய பணத்தை திருடி விட்டான். காலையில் விழித்த அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மிகவும் வசதியாக வாழ்ந்த அவனுக்கு அடுத்த வேளை உணவுக்குக் கூட வழியில்லை. சரி ஏதேனும் கடையில் வேலை செய்து உழைத்து உண்ணலாம் என்றால், ஊருக்கு புதியவன் என்பதால் யாரும் அவனை நம்பி வேலை கொடுக்க தயங்கினர். வேறு வழியின்றி, ஒரு உணவகத்தில் குறைந்த சம்பளத்தில் மேஜையை துடைக்கும் வேலையில் சேர்ந்தான். கடைக்கு வருபவர்களிடம் அன்பாக, மரியாதையாக, கனிவாகப் பழகி ஊர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றான். உணவகத்தின் முதலாளியிடம் நேர்மையாக இருந்து நம்பிக்கையைப் பெற்றான்.
அந்த கிராமத்தில் அதிகம்பேர் விவசாயிகளாகவே இருந்தனர். அவர்களிடம் நெருங்கிப் பழகி அவர்கள் என்னவெல்லாம் விளைவிக்கிறார்கள், அவர்களது தேவை என்ன என்பதை கேட்டு அறிந்து கொண்டான். அப்போது ஒருநாள் அவள் மேஜை துடைத்துக் கொண்டிருக்கும் போது, அங்கு சாப்பிட்ட இரண்டு விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை பெரிய நிறுவனங்கள் எண்ணெய் தயாரிப்பதற்கு அடிமாட்டு விலைக்கு வாங்கி செல்வதை பற்றி புலம்பிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் மெதுவாக ஆமீர்கான் “ஐயா, தாங்களே ஏன் எண்ணெய் எடுத்துக் கொள்ளக் கூடாது?” என்று வினவினான். அதற்கு அவர்கள் “நமது ஊரில் எண்ணெய் ஆலை இல்லை. மேலும் நகரத்திற்கு சென்று எண்ணெய் எடுத்து ஊருக்கு கொண்டு வந்தாலும் பெரிய லாபம் நமக்கில்லை” என்று பதிலளித்தனர்.
உடனே ஆமீருக்கு பொறி தட்டியது. அந்த கிராமத்தில் எப்படியாவது ஒரு எண்ணெய் ஆலை தொடங்கிவிட முடிவெடுத்தான். முதலாளியிடமும் ஊர் மக்களிடம் எடுத்துக்கூறி, எல்லாரிடமும் கடன் வாங்கி ஆலை அமைத்து ஊரிலேயே செக்கு எண்ணெய் எடுக்கத் தொடங்கினர். அதை மிக பக்குவமாகவும் நேர்த்தியாகவும் கலப்படமில்லா சுத்த எண்ணெயாகவும் தயாரித்தான் ஆமிர். அவற்றை பக்கத்து கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சென்று தனது வியாபார யுக்தியால் விரைவிலேயே விற்று தீர்த்தான். மேலும் எண்ணெய் எடுத்ததுப் போக உள்ள சக்கையை அந்த ஊர் விவசாயிகளுக்கு உரமாக பயன்படுத்தக் கொடுத்தான். அதனால் அவர்களுக்கு அதிக லாபமும் மன மகிழ்ச்சியும் கிடைத்தது. மாதங்கள் உருண்டோடின. ஆமிர் வாங்கிய கடனை அடைத்தான். தனது தந்தை கொடுத்த ஒரு வருட கெடு நெருங்கும் பொழுது அவன் கையில் ஒரு லட்சம் ரூபாய் கூட இல்லை. தந்தையை எவ்வாறு சந்திப்பது என்று நானினான். இருப்பினும் நடந்ததை தெளிவாகக் கூறலாம் என்று நம்பிக்கையோடு கிளம்பினான்.
இதற்கிடையில் அயூப் கான் ஒரு நகரத்தை சென்றடைந்து இருந்தான். பணத்துடன் புது தொழில் தொடங்குவதற்காக புதிதாக ஒருவன் வந்து இருக்கிறான் என்பதை அறிந்த ஒரு மோசடிக்காரன் அயூப் கானிடம் பேசி ஏமாற்றி பணத்தை அபகரித்து விட்டான். சிறிது நாட்கள் பிறகு தான் ஏமாற்றப்பட்டு உள்ளோம், பணத்தை இழந்துள்ளோம் என்ற ஆயூப்பிற்க்கு புரிந்தது. அதை எண்ணி மிகவும் ஆத்திரம் அடைந்தான். மிகவும் ஆடம்பரமாக கர்வத்தோடு வாழ்ந்த அவனுக்கு யாருக்கீழும் வேலை செய்து சம்பாதிக்க விருப்பமில்லை. மேலும் எப்படியாவது தந்தை வைத்த பந்தயத்தில் ஜெயித்து விட வேண்டும் என்று வெறி கொண்டான். அதனால் அந்த ஊரில் தான் ஏமாற்றப்பட்டதை போல் பிறரை ஏமாற்றி தான் பிழைக்க வேண்டும் என்று முடிவெடுத்தான்.
தவறான தொழில் செய்பவர்களுடன் சேர்ந்தான். தனது புத்திக் கூர்மையால் காவல் துறையினருக்கு தெரியாமல் எவ்வாறு கடத்துவது, கடத்திய பொருட்களை எவ்வாறு விற்பது, மாட்டினால் எப்படி தப்பிப்பது என்பது போன்ற யோசனைகளைக் கொடுத்தான், திட்டங்கள் தீட்டினான். மிக விரைவிலேயே செல்வம் பெருகியது. லட்சங்களில் புழங்கினான். மீண்டும் ஆடம்பரமாக வாழ்ந்தான். ஒரு வருட காலம் முடிந்து தந்தையை சந்திக்கும் நாள் வரும்போது தன்னிடமிருந்த பத்து லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு பெருமிதமாக கிளம்பினான். அனைத்து சொத்துகளுக்கும் அதிபதி என்ற கனவோடு சென்றான்.
தந்தை இருவரையும் கண்டு மகிழ்ச்சியுடன் வரவேற்றார். பின் ஆமிர் கானிடமும் அயூப் கானிடமும் சேர்த்த பணத்தை காண்பிக்கச் சொன்னார். ஆயூப் மிகப் பெருமையாக 10 லட்சத்தை அவர்முன் கொட்டி “அப்பா, நீங்கள் 5 லட்சம் தானே சம்பாதிக்க சொன்னீர்கள். இங்கே பாருங்கள் நான் அதற்கு இரு மடங்கு சம்பாதித்து உள்ளேன். ஆகவே நானே உங்கள் வியாபாரத்தைக் கவனிக்க தகுதியானவன்” என்று கர்வம் பொங்கக் கனைத்தான்.
ஆமிர் கான் மிகவும் வெட்கப்பட்டு தன் கையில் இருந்த சொற்ப பணத்தை தந்தையிடம் கொடுத்தான். “அப்பா, என்னை மன்னியுங்கள். என்னால் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியவில்லை. நீங்கள் கொடுத்த பணம் திருடு போய்விட்டது. மிகவும் கஷ்டப்பட்டு ஒரு வருட காலத்தில் இவ்வளவு தான் என்னால் சம்பாதிக்க முடிந்தது” என்ற தலைகுனிந்து கூறினான்.
இருவரையும் பார்த்து சுலைமான் சாகிப் சிறிது நேர மௌனத்திற்குப் பின் பேச ஆரம்பித்தார் “எனக்கு அங்கு நடந்தவை எல்லாம் தெரியும். உங்கள் இருவரையும் சோதிக்கவே ஆமீரிடம் திருட்டும் அயூபிடம் மோசடியும் செய்யச் சொன்னேன். ஏனென்றால் வாழ்க்கை எப்போதும் இலகுவாக இருக்காது. நிச்சயம் தோல்விகளையும் நஷ்டங்களையும் சந்திக்க நேரிடும். கஷ்ட நேரங்களில் தான் நமது உண்மை முகம் உலகுக்குத் தெரியும். ஆமீர் நேர்மையை விரும்பினான். சுயமாக உழைத்து கலப்படம் இல்லாத நல்ல தரமான பொருட்களை தயாரித்தான். எந்தத் தொழில் செய்வதற்கும் நேர்மையும் தரமும் அடிப்படை.
ஆனால் ஆயூப், நீ உழைப்பை விரும்பாமல் பணத்தையே முதன்மையாகக் கொண்டாய். அதனால் குறுக்கு வழியில் பிறரை ஏமாற்றி பலரை கஷ்டப்படுத்தி நீ செல்வந்தன் ஆனாய். வாழ்க்கையில் செல்வத்தை இழந்தால் கஷ்டப்பட்டு உழைத்தால் நிச்சயம் திரும்ப சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால் ஒருவனிடம் கருணையும் இரக்கமும் அருளும் போய்விட்டால் திரும்ப வராது. அதனால் உண்மையாக உழைத்த ஆமீர்கானே எனது நம்பிக்கைக்குரியவன். அவனே என் வாரிசு. அவனிடமே என் வியாபாரத்தையும் ஒப்படைக்கப் போகிறேன்” என்றார்.
ஆகவே குழந்தைகளா எப்பொழுதும் நாம் அருளை இழக்கக்கூடாது. ஒரு பரிட்சையில் ஒழுங்காக படிக்க முடியாமல் போய்விட்டால் அடுத்த முறை நன்றாக படித்துக் கொள்ளலாம். ஆனால் ஆசிரியரை ஏமாற்றி பக்கத்தில் இருக்கும் மாணவனை பார்த்து எழுதக் கூடாது. எந்த ஒரு போட்டியிலும் முறையாக பயிற்சி செய்தால் ஜெயித்து விடலாம் ஆனால் எந்த சூழ்நிலையிலும் ஏமாற்றியோ குறுக்கு வழியிலோ ஜெயிக்க நினைக்கக்கடாது. நேர்மையாக வெற்றி பெறுவதே உண்மையான வெற்றி. அதனால் செல்லங்களா, நாம் எப்பொழுதும் அருளை இழக்கக்கூடாது. நாம் சிறுவயதிலேயே உண்டாக்கும் நல்ல பழக்கங்கள் தான் நம்மை வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும். நீங்கள் வளர வளர வாழ்க்கையில் பல சவால்களை போட்டிகளை சிரமங்களை சந்திக்க நேரிடும். ஆனால் வாழ்க்கையில் எந்த நிலையிலும் நல்லொழுக்கத்தை விடக்கூடாது. மிகப் பெரிய பணக்காரனாக வாழ்வது மட்டுமே சிறப்பல்ல. சிறந்த பண்பாளனாக வாழ்வதே சிறப்பு.
Discussion about this post