குறள் # 619
பால் : பொருட்பால்
அதிகாரம் : ஆள்வினையுடைமை ( Manly Effort)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
பொருள்:
விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்
Translation:
Though fate-divine should make your labour vain;
Effort its labour’s sure reward will gain.
Meaning:
Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward.
Transliteration:
theyvaththaan aakaa theninum muyaRchidhan
meyvaruththak kooli tharum
சோம்பேறி அமுதன்
ஒரு கிராமத்தில் அமுதன் என்ற இளைஞன் தனது பாட்டியுடன் வாழ்ந்து வந்தான். சிறுவயதிலேயே அவன் பெற்றோர் இறந்து விட்டதால் பாட்டி அவனை மிகவும் செல்லமாக வளர்த்து விட்டாள். இந்த உலகத்திலேயே வடிகட்டிய சோம்பேறி என்றால் கண்ணை மூடி அவனைக் காட்டலாம். தனக்கு வயதாக வயதாக அமுதன் வேலைக்கு சென்று உதவாமல் தன் உழைப்பில் உண்டு உறங்குவதைக் கண்டு பாட்டி மிகவும் வருந்தினாள். எவ்வளவோ பாட்டி அறிவுறுத்தினாலும் அமுதன் திருந்துவதாக இல்லை.
அவர்களுக்கு சொந்தமாக ஒரு குடிசை வீடும், ஒரு கிணறும், ஒரு சின்ன வயல் நிலமும் இருந்தது. பாட்டிக்கு வயதானதால் முன்பைப் போல் வயல் வேலைகளை தனியாக செய்ய முடியவில்லை. அதனால் தன்னால் முடிந்த சின்னச் சின்ன வேலைகள் செய்து சம்பாதித்து அன்றைக்கான உணவு சமைப்பாள். ஆனால் அமுதன் அதை உண்டுவிட்டு அங்கேயே படுத்து உறங்கி விடுவான்.
பாட்டி தினந்தோறும் கடவுளிடம் அழுது அமுதன் திருந்த வேண்டும் என்று வேண்டிக் கொள்வாள். அவளது அழுகையை கேட்டு மனமிரங்கிய கடவுள் அமுதனுக்கு மூன்று வாய்ப்புகள் தர முடிவெடுத்தார்.
அடுத்த நாள் காலை, ஒரு சிட்டுக்குருவி அவனிடம் மூன்று தங்க நெல்மணிகளை கொடுத்து “தினை விதைத்தால் தங்கம் அறுப்பாய்” என்று கூறிச் சென்றது. ஆனால் அமுதனோ “நிலத்தை உழுது, நெல் விதைத்து, நீர் பாய்ச்சி, களை பறித்து, பயிரை பாதுகாத்து, அறுவடை செய்ய வேண்டும். என்னால் முடியாதுப்பா” என்று கூறி படுத்து விட்டான். கடவுளுக்கு சற்று கோபம் என்றாலும் இரண்டாவது வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்று எண்ணினார்.
ஒரு குறி சொல்பவர் அமுதனிடம் வந்து “இந்த வீட்டின் ஈசானி மூலையில் 30 அடியில் ஒரு புதையல் உள்ளது” என்று கூறினார். ஆனால் அமுதனோ “முப்பதடி தோண்ட வேண்டுமா? என்னால் முடியாதுப்பா” என்று கூறி மறுத்து விட்டான். கடவுளுக்கு கோபம் அதிகமானது. இருந்தாலும் அவனது பாட்டுக்காக மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பு கொடுக்க முடிவெடுத்தார்.
ஒரு வயதான வழிப்போக்கர் அமுதனிடம் வந்து “மிகவும் தாகமாக இருக்கிறது. குடிக்க கொஞ்சம் தண்ணீர் தா” என்று கெஞ்சிக் கேட்டார். அதற்கு அமுதன் இருந்த இடத்தை விட்டு எழுந்திருக்காமல் “வீட்டின் பின்னால் ஒரு கிணறு இருக்கிறது. நீங்களே சென்று நீர் இறைத்து குடித்துக் கொள்ளுங்கள்”. அவன் கிணற்றிலிருந்து தண்ணீர் குடித்த வழிப்போக்கர் “தண்ணீர் தந்தமைக்கு நன்றி! அதற்கு நன்றிக்கடனாக உனது கிணற்றை விருப்பங்கள் நிறைவேற்றும் மந்திர கிணறாக மாற்றியுள்ளேன். நீ சம்பாதித்து ஒரு ரூபாயேனும் கிணற்றினுள் போட்டு உன் விருப்பத்தை கேட்டால், கிணறு உடனே அதை நிறைவேற்றி வைக்கும்” என்று வரம் கொடுத்தார். அதற்கும் அமுதன் “என்ன! நான் வேலை செய்து சம்பாதிக்க வேண்டுமா? அப்படி நிறைவேற்ற எனக்கு எந்த விருப்பமும் இல்லை” என்று கூறிவிட்டு மீண்டும் உறங்கினான்.
இம்முறை கடவுளுக்கு கடும் கோபம் வந்துவிட்டது. ‘அவன் தானாக திருந்தும் வரை நான் அவனுக்கு எந்த உதவியும் செய்யப் போவதில்லை’ என்று சூளுரைத்தார். அமுதன் திருந்தாதததைக் கண்டு தினம் தினம் வருந்திய பாட்டி ஒரு நாள் உயிர் விட்டார். அதன்பின் அமுதன் மிச்சம் இருந்த கொஞ்சம் பணத்தில் சில காலத்தைக் கழித்தான். அதன்பிறகு சாப்பாட்டுக்கே வழி இல்லாததால் வேலைக்கு செல்ல சோம்பல் பட்டு பிச்சை எடுத்தான். “இவ்வளவு பெரிய ஆளாக இருக்கிறாய். இப்படி உழைக்காமல் பிச்சை எடுக்கிறாயே?” என்று யாரும் இவனுக்கு யாசகம் இடவில்லை.
பசி வயிற்றை கிள்ளவே ஏதாவது கடையில் வேலை செய்து சம்பாதிக்கலாம் என்றால் இவனுடைய சோம்பேறித்தனத்தை அறிந்த எவரும் இவனுக்கு வேலை கொடுக்கவில்லை. பசியால் தலை சுற்றி மயக்கம் வரவே தெருவோரத்தில் படுத்தான். யாருமே அவனை கண்டுகொள்ளவில்லை. சிலர் அவனால்தான் அவன் பாட்டி இறந்ததாக பழித்தனர். தன் பாட்டி அரும்பாடுபட்டு தன்னை வளர்த்ததை எண்ணினான். கடைசி காலத்தில் கூட அவருக்கு உதவாமல் அவரை கஷ்டப்படுத்தியதை எண்ணி வருந்தினான்.
அப்போது அவன் அரை மயக்கத்தில் ஒரு எறும்பை பார்த்தான். அது சுறுசுறுப்பாக அவனை கடந்து சென்று தன்னைக் காட்டிலும் பெரிய உணவுப் பண்டத்தை கஷ்டப்பட்டு தன் மேல் சுமந்து சென்றது. அப்போதுதான் அமுதன் உணர்ந்தான் ஒரு சின்ன எறும்பு கூட தனக்குத் தேவையானதை தானே தேடி தன்னை காட்டிலும் பெரிய பொருளை சுமந்து உண்கிறது. அதனால் அந்த எறும்பைப்போல் தானும் உழைத்து உண்ண வேண்டும் என்று நினைத்து திருந்தினான். ஆனால் கடவுளுக்கு அவன்மேல் கோபம் குறையவில்லை. அவன் உண்மையிலேயே திருந்தி விட்டானா என சோதனை செய்ய நினைத்தார்.
அமுதன் தனக்கு சொந்தமான சிறிய நிலத்தில் கடனுக்கு நெல் வாங்கி, வறண்ட நிலத்தை உழுது, உரமிட்டு, நெல்மணிகளை விதைத்து, கிணற்றிலிருந்து நீர் இறைத்து வயலுக்குப் பாய்ச்சி, களை பறித்து, பூச்சி மருந்து தெளித்து, பயிர்களை கண்ணைப் போல் காத்து வந்தான். ஆனால் கடவுளின் சோதனை வறட்சி ரூபத்தில் வந்தது. அந்த வருடம் நாடெங்கிலும் கடும் வறட்சி. எந்த ஆற்றிலும் நீர் இல்லை. குளம் குட்டைகளில் நீர் குறைந்தது. அவனது கிணறும் வற்றியது. அவன் ஆசையாய் வளர்த்த பயிர்கள் கருகியது. தன் உழைப்பு வீணானது அமுதனுக்கு கஷ்டமாக இருந்தாலும் தான் முயற்சி செய்வதை அவன் விடவில்லை.
அடுத்த வருடமும் அதே போல் உழவு செய்தான். பயிர்களும் செழிப்பாக வளர்ந்தது. ஆனால் கடவுளோ மீண்டும் சோதித்தார். அந்த வருடம் புயலும் கடும் மழையும் சுழன்றடித்தது. பயிர்கள் எல்லாம் நீரில் மூழ்கி அழுகியது. இம்முறை அமுதன் சோர்ந்து போனான். ஆனாலும் அடுத்த வருடம் மேலும் கடுமையாக உழைப்பேன் என்று உறுதி கொண்டான். மூன்றாம் வருடமும் முன்பைவிட கடுமையாக உழைத்தான். அவனது விடாமுயற்சியைக் கண்டு வியந்த கடவுள் அவனை ஆசீர்வதித்தார். அந்த வருடம் அவனுக்கு மிகச் செழிப்பாக இருந்தது. மற்ற எல்லோரையும் விட அவன் வயலில் அதிக அளவில் கதிர்கள் விளைந்தது.
அவன் முயற்சியின் முக்கியத்துவத்தையும், உழைப்பின் உன்னதத்தையும் உணர்ந்தான். மிகக் கடுமையாக உழைத்தான்; தன் திறமைகளை வளர்த்தான்; அனைவருக்கும் உதவினான்; ஊரில் எல்லோரும் வியக்கும்படி வாழ்ந்தான்.
இப்போ உங்களுக்கு புரிஞ்சுதா குழந்தைகளா. கடவுளே நமக்கு உதவி செய்ய வேண்டாம் என்று நினைத்தாலும், நாம் நம்பிக்கை இழக்காமல் விடாமுயற்சி செய்தால் கடுமையாக உழைத்தால் நிச்சயம் அதற்கான பலனை நாம் அடைவோம், நினைத்ததை சாதிப்போம்!
குழந்தைகள் இக்கதையை கேட்டு மகிழ:
Discussion about this post