கண்கவர் கலைகள் செய்யும் மாயன்..
பலசாலிகளையும் எளிதில் வீழ்த்தும் வீரன்..
கார்மேகக் கண்ணனைப் போல் கம்பீரமாய்
தன் கோட்டையில் வீற்றிருந்தான்..
அப்போது தான் விட்டில் பூச்சி
போலிருந்தவளைக் கண்டான்..
அவள் வேண்டுமென வெறி கொண்டான்..
தன் வஞ்சக வலையை விரித்தான்..
வஞ்சியவள் சஞ்சலம் இல்லாமல் வீழ்ந்தாள்..
முழுவதுமாய் அவளைக் கொண்டு
வெறும் கூடாய் விட்டுச் சென்றான்..
கொண்டாட்டமாய் எட்டுத்திக்கும் எட்டினான்..
அடுத்து யாரை அடைய என்று அலைந்தான்..
அந்நேரம் பல நாள் தவம் முடித்த சாது போல்
சாந்தமாய் வெளி வந்தாள் அம்மாது..
காண்போர் உள்ளங்களை களிப்புற செய்யும்
அழகு வண்ணப் பேழையும் அவள்தானோ..
சொக்கியவர்கள் பித்துப்போல் பின்னால்
சுற்றும் சுந்தரியும் அவள்தானோ..!
அழகியின் அகால விதி..
அகப்பட்டாள் அவன் விழி வழி..
கண்ட நொடியவன் கண் சிமிட்டவில்லை
கால்கள் சிலைபோல் அசைவில்லை..
உள்ளுக்குள் ஆசை அலை மோதக்கண்டான்..
ஒருநாள் விருந்தாக்கிட முடிக்கொண்டான்..
அவள் தினம் வரும் வழி காத்து நின்றான்..
அருந்தினம் அயராது பின்தொடர்ந்தான்..
முதலில் கண்டும் காணாததாய் சிறகடித்தாள்..
எங்கும் அவளை வரவேற்க, அவன் கைவண்ணத்தில் தோரணங்கள் தொங்க,
வசீகரன் வசம் வசியம் கொண்டாள் கோதை..
அவனன்பு மெய்யென விழைந்தாள் பேதை..
மதியிழக்கும் மையல் கொண்ட மாதவி
தன் இனம் மறந்தாள்; தன் குலம் துறந்தாள்..
உற்றார் அறிவுரை கேளாது
சுற்றார் சைகைகள் பாராது
அவன் கவின்கலைக்கண் காதல் கொண்டாள்..
பல கனவுகளோடு வானில் பறந்தாள்…
அவனுடன் வாழ வேண்டி
விரும்பி அவன் வீடு சென்றாள்..
சேர்ந்த பின்னரே அது பாசக்கூடல்ல
தனக்குத் திரித்த பாசக்கயிறு என்று தெளிந்தாள்..
துடிதுடித்தாள்; தப்பிக்க நினைத்தாள்..
மறுபடி மறுபடி சிக்கினாள்..
அவள் நடுங்க இவன் நெருங்க
மெல்ல மெல்ல அவளை முழுவதுமாய் ஆட்கொண்டான்..
காதலுக்காக மறுகி காதலனுக்காக உருகினாள்..
சிலந்தி வலையில் சிக்கிய பட்டாம்பூச்சி..!
Discussion about this post