“மனதில் என்ன பேரழகி என்ற
நினைப்போ அவளுக்கு,
உன்னை நிராகரிக்க?”
“விடு மச்சான், நீ கிடைக்க
அவளுக்கில்லை அதிர்ஷ்டம்”
“திமிர் பிடித்தவள், அடங்காபிடாரி”
ஆறுதல் உரைக்க ஆயிரம் பேர்
உன் விடுதி அறையில்;
காயப்படுத்தி விட்டேனாம்,
உன் காதலை ஏற்க மறுத்து..
ஆயினும் காற்று களவாடும் காய்ந்த
சருகை போல் தோய்ந்த உன் முகம்..
காண மனம் கொள்ளாது
முகத்தை திருப்பிக் கொள்கிறேன்..
உன் விழியில் என் விழியை பார்த்தால்
உள்ளத்தில் ஒளித்த உண்மை
உலகறியும் என ஊமை மனது
மௌனம் சாதித்தது.
உன் மனதில் காதல் வேரூன்றிய போதே
என் மனதில் அது விருட்சமென வளர்ந்திருந்தது..
கிள்ளி எறியவே கதறுகிறாய் எனில்
வெட்டி வீச மட்டும் என்னால் ஆகுமோ?
ஆகவே வேலியிட்டுக் காத்தேன் என் காதலை
ஆனால் வீசாமல் தடுத்தேன் உன் நேசத் தென்றலை!
காரணம் என்ன? குறுக்கிட்டு வாதிடும் உன் நியாயக் கோபம்;
குற்றவாளி கூண்டில் நான் – உன் விடுதலை வேண்டி;
வெவ்வேறு சமூகம், சேரவிடா சாதிச்சாயம்,
அறிவுக்கண் மறைக்கும் பாசத்தையும் குருடாக்கும் குடும்ப கவுரவம்,
ஒன்றாய் வாழ விடாமல் வெட்டி சாய்க்கும் குலவெறி வன்மம்..
மனதால் ஒன்றி உயிரே என்றுருகி பின் அக்காதலுக்காய் மருகி மாய்ந்து
காலத்தால் அழியா காவியமாய்
வாழ்வதோ வாழ்க்கை?
கண்காணா தேசத்தில் நீ இருந்தாலும்
என் நெஞ்சத்து நேசத்தில் எப்போதும் வாழ்ந்திருப்பாய்!
“ஒரு நாளேனும் உன்னுடன் வாழ்ந்திட
வேண்டும்” – உன் வேட்கை;
நான் பேராசைக்காரி..
நூறு வருடம் வாழ வேண்டும் – நீ!
பெற்றோர் மனம் எதிர் கண்டு நாம் மணம் கொண்டு
பின் கொலையுண்டு கிடக்க வேண்டாமென என் காதலை மறைத்தேன், உன் காதலை மறுத்தேன்!
“உன்னைத் தவிர எதுவுமே எனக்குத் தெரியவில்லை, தேவையுமில்லை” – உன் காதல் பித்தம்;
எனக்கோ உனை காணும் போதெல்லாம் தெரிவது
உன் தாயும் தங்கையும் மட்டுமே!
அவர்களின் அளப்பரியா அன்பையும் நம்பிக்கையையும்
அசைத்துப் பார்க்க ஆசை இல்லை..
உனக்கு நான் வேண்டாம் என்றேன்!
ஆயினும் அக்கண்கொட்டா பார்வைகள்,
உயிர் கரையும் கவிதைகள், யாரும் காட்டா அக்கறை,
நான் புன்னகைக்க உன் சேட்டைகள்,
கேட்காமலே நீ செய்த உதவிகள் – என ஆயிரமாயிரம் நினைவுகள்
கஞ்சன் கொண்ட பொக்கிஷமாய்
என் நெஞ்சகத்துள் பாதுகாப்பேன்!
உன் நலம் வேண்டி நாளும் தவம் இருப்பேன்..
உன் நல்லது கெட்டது என நாலும் கேட்டறிவேன்..
என்றோ ஒரு நாள் உனக்கு திருமணம் எனத் தோழி கூற
உள்ளுள் தோன்றும் சிறு வலியை உதாசீனப்படுத்தி
உதடுகளில் புன்னகை பூப்பேன்
உன் இல்வாழ்வு சிறக்க வேண்டுவேன்!
மரணம் என்னை அணைக்கும் கணத்திலும்
மலர்ந்த உன் முகம் ஒரு நொடி வந்து போகும்
இறக்கும் தருவாயிலும் இரக்கமற்ற வலியிலும்
இதழோரம் விரியும் சிரிப்பினை
யாரும் காணும் முன்னே
எப்பொழுதும் போல் மறைத்து மரிப்பேன்!
Discussion about this post