குறள் # 69
பால்: அறத்துப்பால் – Virtue
இயல்: இல்லறவியல் – Domestic Virtue
அதிகாரம்: மக்கட்பேறு – The wealth of children
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
விளக்கம்:
தன் மகனைப் பிறர் ‘அறிவொழுக்கங்களில் சிறந்தவன்’ என்று சொல்லக் கேட்ட தாய், அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியை விட மிக்க மகிழ்ச்சி அடைவாள்.
Translation:
When mother hears him named ‘fulfill’d of wisdom’s lore,’
Far greater joy she feels, than when her son she bore.
Meaning:
The mother who hears her son called “a wise man” will rejoice more than she did at his birth.
Transliteration:
Eendra Pozhudhin Peridhuvakkum Thanmakanaich
Chaandron Enakketta Thaai.
முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் முத்தையா மணிமேகலை தம்பதி வாழ்ந்து வந்தனர். செல்வந்தர்களாக அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. பல கோயில்களுக்கு சென்று வழிபட்டு பல மருத்துவர்களை சந்தித்து பத்து வருடங்களுக்கு பிறகு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அப்போது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. குழந்தைக்கு ‘செல்வம்’ என பெயரிட்டு மிகவும் செல்லமாக வளர்த்தனர். அதனாலேயே அவன் சொல் பேச்சு கேட்காமல், பள்ளிக்கு ஒழுங்காக செல்லாமல், மிகவும் சண்டித்தனமாகவும், எதற்கெடுத்தாலும் அடம் பிடிப்பவனாகவும் வளர்ந்தான்.
மணிமேகலையும் ஒரே பையன், பல வருடங்கள் கழித்து பிறந்தவன் என்பதால் செல்வத்தை கண்டிக்காமல் வளர்த்தாள்; அவன் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்தாள். வளரவளர அவனது தவறான நட்பு வட்டாரத்தால் பல கெட்ட பழக்கங்களைக் கற்றான். அண்டை வீட்டுக்காரர்களும அவன் தொல்லை தாங்காமல் தினமும் வந்து
அவனது பெற்றோரிடம் புகார் கூறினர். அவனை நினைத்து மிகவும் வருத்தம் அடைந்த முத்தையா மணிமேகலை அவனுக்கு அறிவுரை கூறினர். ஆனால் அவன் திருந்துவதாக இல்லை. அதனால் அவர்கள் “நம் தொழிலை செல்வத்திடம் ஒப்படைப்போம். அப்போதாவது அவனுக்கு பொறுப்பு வரும்” என்று நினைத்து அவனை ஒரு நாள் அழைத்து “மகனே, எங்களுக்கு வயதாகி விட்டதால், மன நிம்மதிக்காக நாங்கள் சில வருடங்கள் காசி செல்கிறோம். நம் தொழிலை சிறப்பாக செய்து தழைத்தோங்கச் செய்வாய்” என்று கூறி இருவரும் புறப்பட்டனர். கணக்கு கூட சரியாக பார்க்கத் தெரியாத செல்வத்தை அனைவரும் சுலபமாக ஏமாற்றினார். ஏமாந்த அவனை ‘முட்டாள்’ என்று நகைத்தனர். தொழில் நஷ்டத்தில் நலிந்தது. அவன் செல்வம் குறையவே அவனது நண்பர்களும் குறைந்தனர். அவன் தந்தை மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய கடை சில மாதங்களிலேயே கடனில் தத்தளித்தது. கையில் காசின்றி அவமானப்பட்டு நின்றான்.
செய்வதறியாது திகைத்த அவன் “அம்மா அப்பா திரும்பி வந்து கேட்டால் என்ன சொல்வேன்? என்ன செய்வேன்?” என நினைத்து எங்கேயாவது செல்லலாம் என்று முடிவெடுத்து கால்போன போக்கில் நடந்தான். கடும் வெயிலில் பல ஊர்கள் கடந்து போகும்போது பசியால் அவன் சுருண்டு விழுந்தான். அப்போது அந்த வழியாக தனது சீடர்களுடன் வந்த ஒரு குரு அவனைக் கண்டார். அவனுக்கு உணவு தண்ணீர் கொடுத்து அவருடன் அழைத்துச் சென்றார். தன்னுடைய கதையை கண்ணீருடன் கூறினான் செல்வம். அவற்றை அமைதியாக கேட்ட குரு சிரித்துக்கொண்டே “மகனே! உன் கண்ணீரே நீ உன் தவறை உணர்ந்து விட்டாய், திருந்தி விட்டாய் என்பதை உணர்த்துகிறது. எந்த ஒரு மனிதனும் தவறு செய்வது இயல்பே. அந்தத் தவறிலிருந்து அவன் பாடத்தை கற்றுக் கொண்டு மனம் திருந்தி வாழும்போது தான் மனிதன் ஞானி ஆகிறான்” என்று கூறி குரு செல்வத்தை தனது சீடனாக ஏற்றுக்கொண்டார்.
செல்வமும் மிக விரைவாக அனைத்தையும் கற்றுக் கொண்டு பக்குவம் அடைந்தான். குருவே வியக்கும் அளவுக்கு சிறந்த மாணவனாகத் திகழ்ந்தான். ஒரு நாள் குரு அவனை அழைத்து அவன் தான் கற்றதை பிறருக்கு கற்பிக்கும் நேரம் வந்துவிட்டது என்று கூறி கிளம்பி விட்டார். செல்வம் அதே ஊரில் தங்கி தன்னைப் போலவே இளம் வயதில் படிக்காமல் சுற்றித்திரியும் பிள்ளைகளை அழைத்து அறிவுரை கூறி திருத்தி பாடம் கற்பிக்கலானான். அவர்களது பெற்றோர் செல்வத்துக்கு மிகவும் நன்றி கூறினர். மேலும் செல்வம் அந்த ஊர் மக்களுக்கு வேண்டிய உதவிகளை தன்னால் இயன்ற வரை செய்தான். அனைவரது அன்பையும் வென்றான். மக்கள் அவனைப் போற்றினர்.
இதற்கிடையில் செல்வத்தின் பெற்றோர் காசியில் இருந்து திரும்பி வந்தனர். மகனைக் காணாமல் தவித்துப் போயினர். அவனைத் தேடி ஒவ்வொரு ஊராக திரிந்தனர். கடைசியில் செல்வம் தங்கியிருக்கும் ஊருக்கு வந்தனர். சோர்வாக இருக்கும் அந்த தம்பதியினரை பார்த்த ஒரு பெரியவர் “ஐயா, அம்மா, உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் எங்கள் ஊரில் ஒரு ஆசான் உள்ளார். மிகவும் நல்லவர். அனைவருக்கும் உதவுபவர். அவரைச் சென்று சந்தியுங்கள். நிச்சயம் உங்கள் பிரச்சினை தீரும்” என்று கூறினார். முத்தையாவும் மணிமேகலையும் அவர் கூறிய விலாசத்திற்கு போன இப்போது இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. செல்வமும் தமது பெற்றோரைக் கண்டு மிகவும் மகிழ்ந்தான். ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
ஊர் மக்கள் அனைவரும் செல்வம் மாதிரியான ஒரு சான்றோனை பெற்றெடுத்தது அவர்கள் செய்த பாக்கியம் என்று போற்றினர். முத்தையாவும் மணிமேகலையும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.
குழந்தைகளா, நிச்சயமாக நம் பெற்றோர் நாம் பிறந்த போது மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் பெருமைப்படும் படி பிறர் நம்மை போற்றும் பொழுது, நாம் பிறந்த போது அவர்கள் அடைந்த ஆனந்தத்தை விட அதிக மகிழ்ச்சி அடைவார்கள். ஆகவே நாம் நல்ல பிள்ளைகளாக வளர்வோம். நம் பெற்றோர் பெருமை படும்படி பிறர் போற்ற வாழ்வோம்..!
குழந்தைகள் இக்கதையைக் கேட்க:
Discussion about this post