குறள் # 369
பால்: அறத்துப்பால்
அதிகாரம்: அவா அறுத்தல் / Curbing of Desire
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
விளக்கம்:
பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்.
Translation:
When dies away desire, that woe of woes
Ev’n here the soul unceasing rapture knows.
Explanation:
Even while in this body, joy will never depart (from the mind, in which) desire, that sorrow of sorrows, has been destroyed.
Transliteration:
Inpam Itaiyaraa Theentum Avaavennum
Thunpaththul Thunpang Ketin.
பேராசை குரங்கு
ஒரு அழகான நந்தவன காட்டில் ஒரு குரங்கு இருந்தது. அதற்கு எதைப் பார்த்தாலும் ஆசை. ஒரு பழத்தைப் பார்த்தாலும் சரி, பிறரை பார்த்தாலும் சரி. அவர்களிடம் உள்ளது போலவே தனக்கும் வேண்டும் என்று எண்ணும். அதனாலேயே தன்னிடம் உள்ளவற்றை வைத்து மகிழ்ச்சி அடையாமல் தேவையில்லாத ஆசை கொண்டு துன்பத்துடன் வாழ்ந்து வந்தது.
இப்படித்தான் ஒரு நாள் காலை ஒட்டகச்சிவிங்கி ஒன்றினை பார்த்தது. அதன் அழகான நீளமான கழுத்தை பார்த்து வியந்தது. உடனே கடவுளிடம் குறை கூற ஆரம்பித்தது “கடவுளே, எனக்கும் அதுபோல் நீளமான கழுத்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். என் கழுத்தை பாருங்கள் குட்டியாக கட்டையாக இருக்கிறது” என்று சலித்துக் கொண்டது.
பிறகு கொஞ்ச நேரத்தில் வலிமையான கவர்ச்சியான கொம்புகள் உடைய மான் ஒன்றினை பார்த்தது. தனக்கும் அதுபோல கொம்புகள் இருந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும் என்று நினைத்தது. மறுபடியும் கடவுளிடம் இன்னும் கோபமாக “என்ன கடவுளே, மான் போல எனக்கும் அந்த அழகான கொம்புகள் கொடுத்திருக்கலாம் அல்லவா. என் தலையைப் பாருங்கள் ‘மொழுக் மொழுக்’ என்றிருக்கிறது” என்று அங்கலாய்த்துக் கொண்டது.
இன்னும் சற்று தூரத்தில் மிகவும் அழகான ஆண் மயில் ஒன்றினை கண்டு வியந்து நின்றது. மயில் மீது இருந்து தன் கண்ணை எடுக்க முடியவில்லை குரங்குக்கு. அதன் அழகிய வண்ண தோகைகளை ஆச்சரியமாக பார்த்தது. இப்போது கடவுளிடம் கோபமாக “கடவுளே, என்ன ஓரவஞ்சனை உங்களுக்கு. மயிலை இவ்வளவு வண்ணமயமாக கண்குளிரப் படைத்து விட்டு என்னை மட்டும் சாம்பல் நிறத்தில் படைத்துள்ளாய். எனக்கும் அந்த மாதிரி அழகிய தோகைகள் இருந்தால் எவ்வளவு அழகாக இருப்பேன்” என்று கடிந்தது.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஒரு தேவதை குரங்குக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று தோன்றியது. உடனே தேவதை குரங்கின் முன்பு தோன்றி தன் கையிலுள்ள மந்திரக்கோலை அதன் முன் காட்டி “உன் விருப்பப்படியே நடக்கட்டும் குரங்கே” என்று கூறியது. என்ன ஒரு ஆச்சரியம்! உடனே குரங்குக்கு ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து, மானின் கொம்புகள் மற்றும் மயிலின் தோகைகள் வந்தன. அவற்றைக் கண்டு குரங்கு மட்டற்ற மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. சந்தோஷத்தில் ஆடியது பாடியது.
சிறிது நேரத்தில் அதற்கு பசிக்க ஆரம்பித்தது. அங்கே வாழைப்பழம் மட்டும்தான் இருந்தது. வாழைப்பழத்தை தோல் உரித்து சாப்பிட முயன்ற போது அதன் நீளமான கழுத்தை கொண்டு குனிந்து சாப்பிட இயலவில்லை. அதனால் குரங்குக்கு பசியால் அழுகை வந்தது.
அப்போது அங்கு வந்த வேடன் மயில் தோகையுடன் குரங்கு இருப்பதைக்கண்டு ஆச்சரியம் உற்றான். அதை பிடித்து ஊரில் வித்தை காட்டினால் நிறைய பணம் கிடைக்கும் என்று நினைத்தான். அதனால் அந்தக் குரங்கினை பிடிக்க முயன்றான். வேடனை கண்ட குரங்கு அவசரமாக அடுத்த மரத்திற்கு தாவி தப்பிக்க நினைத்தது. ஆனால் குரங்கின் கொம்புகள் மரக்கிளையில் மாட்டிக்கொண்டன.
குரங்கு தன் தவறினை நினைத்து அழ ஆரம்பித்தது “நீளமான கழுத்தினால் எனக்குப் பிடித்த வாழைப்பழத்தைக் கூட சாப்பிட முடியவில்லை. அழகான மயில் தோகையால் தான் ஆபத்தில் மாட்டிக் கொண்டேன். வலிமையான கொம்பினால் மரக்கிளையில் தப்பிக்க முடியாமல் சிக்கிக்கொண்டேன். நான் நானாகவே இருந்திருக்கலாம். தேவையில்லாமல் மற்ற விலங்குகளை கண்டு ஆசைப்பட்டு துன்பத்திற்கு ஆளாகி விட்டேன்”. குரங்கு தன் தவறை உணர்ந்து விட்டதைக் கண்ட தேவதை அதை பழைய நிலைமைக்கு மாற்றியது.
அன்றிலிருந்து குரங்கு தான் எப்படி இருக்கிறதோ, தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்தது. என்றுமே தேவையில்லாததற்கு ஆசைப்படாமல் துன்பமில்லாமல் சந்தோஷமாய் இருந்தது.
கதை பிடித்ததா குழந்தைகளா? சில சமயம் நாமும் இந்த குரங்கு போல தான் நமக்கு கடவுள் என்ன கொடுத்திருக்கிறாரோ அதை வைத்து திருப்தி அடையாமல் மற்றவர்களைப் பார்த்து “அது என்னிடம் இல்லை, இது என்னிடம் இல்லை” என்று தேவையில்லாத ஆசை வளர்த்துக்கொண்டு துன்பத்துடன் வாழ்கிறோம். உண்மையில் நம்மிடம் என்ன இருக்கிறதோ அதுவே நாம் சந்தோஷமாக வாழ்வதற்கு போதுமானது. புத்தர் கூறியது போல் “ஆசையே துன்பத்திற்கு காரணம்”. அதனால் தேவையில்லாத ஆசை கொள்ளாமல் துன்பம் இல்லாமல் மீதமுள்ள வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.
குழந்தைகள் இக்கதையை கேட்டு மகிழ:
https://anchor.fm/athila-nabin/episodes/——-e18hhj9
Discussion about this post