குறள் # 428
பால்: பொருட்பால்
அதிகாரம் : அறிவுடைமை (The Possession of Knowledge)
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்
பொருள்:
அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள். அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.
Translation:
Folly meets fearful ills with fearless heart;
To fear where cause of fear exists is wisdom’s part.
Meaning:
Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared.
Transliteration:
Anjuva Thanjaamai Pedhaimai Anjuvadhu
Anjal Arivaar Thozhil
பயந்தாங்கோலி மான் குட்டி
ஒரு காட்டில் அழகான மான்குட்டி ஒன்று வாழ்ந்து வந்தது. அது மிகவும் துருதுருவென சுட்டித்தனமாக இருக்கும். ஆனால் அதே சமயம் அது ஒரு வெகுளி. யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பி விடும். அதன் நண்பர்கள் அதனை எளிதாக ஏமாற்றி விடுவார்கள். ஏதாவது கூறி பயம் காட்டுவார்கள். மான் குட்டி பயந்து நடுங்குவதைக் கண்டு சிரிப்பார்கள்.
ஒருநாள் மான் குட்டி தன் வீட்டின் அருகே பழங்கள் சாப்பிட சென்றது. அப்போது சட்டென்று ஒரு உருவம் உருண்டு செல்ல அதைக் கண்டு பயந்து அலறியது. அந்த உருவம் உண்மையில் ஒரு முள்ளம்பன்றி. தன்னைக் கண்டு மான்குட்டி அழுவதை உணர்ந்த முள்ளம்பன்றி சிரித்துக்கொண்டே மான்குட்டி முன் சென்று வணக்கம் சொன்னது. முள்ளம் பன்றியின் உடம்பு முழுக்க முட்களை பார்த்த மான்குட்டி மேலும் பயந்து ஓட ஆரம்பித்தது. அதைக்கண்டு முள்ளம்பன்றி மிகவும் சங்கடப்பட்டது.
பயந்து ஓடிய மான் குட்டி ஒரு வயசான நரியின் வீட்டின் முன்பு போய் நின்று மூச்சிரைத்தது. ஏற்கனவே பசியில் இருந்த நரி மான் குட்டியை சாப்பிட ஆசைப்பட்டது. ஆனால் வயதான தன்னால் இளம் மான் குட்டியை துரத்திப் பிடிக்க இயலாது என்று எண்ணிய நரி சூழ்ச்சி செய்து மான் குட்டியை தன் வலையில் வீழ்த்தி உண்ண திட்டமிட்டது.
மெதுவாக வந்து மான் குட்டியிடம் நல்லவன் போல பேச்சுக் கொடுத்தது “என்னாச்சு பாப்பா? ஏன் எதையோ பார்த்து பயந்தது போல ஓடி வருகிறாய்?” என்று கேட்டது. வெகுளியான மான்குட்டி தான் பழம் உண்ண சென்றபோது முள்ளம்பன்றியை கண்டு பயந்து ஓடி வந்த கதையை கூறியது. கரிசனத்துடன் கேட்பது போல் நடித்த நரி, அதனை ஆசுவாசப்படுத்தி விட்டு ஒரு கூடை நிறைய பழங்கள் பறித்து கொடுத்தது. அதைக்கண்டு துள்ளிக்குதித்த மான்குட்டி நரி மிகவும் நல்லவர் என்று நம்பியது. அதனுடன் நட்பாகப் பழக ஆரம்பித்தது.
எதேச்சையாக அதனைக் கண்ட மான் குட்டியின் அம்மா உடனே வந்து மான் குட்டியை தரதரவென வீட்டிற்கு இழுத்துச் சென்றது. நடந்தவற்றையெல்லாம் மான்குட்டி விளக்க பொறுமையாக கேட்டுக்கண்டிருந்த அம்மா மான் அறிவுரை கூறியது “அன்பு மகளே, நீ கூரான முட்களை கண்டு பயந்த முள்ளம்பன்றி நமது எதிரி அல்ல. ஆனால் உனக்கு கூடை நிறைய பழங்கள் கொடுத்த நரி தான் நமது எதிரி. அதனால் நமக்கு எந்தநேரமும் ஆபத்து வரலாம். ஆகவே முள்ளம்பன்றியை பார்த்து பயப்படாதே. பயப்பட வேண்டியது நரிக்கு மட்டுமே. அதனுடன் இனிமேல் நட்பு பாராட்டாதே”. தாய் சொன்னதைக் கேட்டு தலையாட்டிய மான்குட்டி திருந்துவதாக இல்லை.
அம்மாவிற்கு தெரியாமல் மான்குட்டி தினமும் நரி வீட்டுக்கு சென்றது. நரியும் தினமும் ஒரு பழக் கூடையை கொடுத்து குட்டியின் நம்பிக்கையை பெற்றுக் கொண்டது. ஒரு நாள் நரி தன் திட்டத்தை நிகழ்த்த முடிவெடுத்தது. அவ்வாறு மான்குட்டி அதன் வீட்டிற்கு சென்றபோது நரி மெதுவாகக் கூறியது “அன்பு மான் குட்டியே, நான் வழக்கமாக பழம் பறிக்கும் மரத்தில் பழங்கள் காலியாகிவிட்டது. சற்று தொலைவில் எனக்கு தெரிந்த இடத்தில் மிகவும் சுவையான பழங்கள் உள்ளது. வா, நான் உன்னை அங்கு அழைத்துச் செல்கிறேன்”. அதை உண்மை என்று நம்பிய அப்பாவி மான்குட்டி அதனுடன் சென்றது. நரி நயவஞ்சகமாய் மனதிற்குள் சிரித்தது.
மான்குட்டி நரியுடன் செல்வதை முள்ளம்பன்றி பார்த்துவிட்டது. அவர்களுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்தது. நரி மான்குட்டி தப்பிக்க இயலாத இடத்திற்கு அழைத்துச் சென்றது. மான்குட்டி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு “இங்கே பழங்கள் எதுவும் இல்லையே” என்று அப்பாவியாய் கேட்டதும் நரி தன் உண்மை முகத்தைக் காட்டியது. சத்தமாக சிரித்த நரி “உன்னை சாப்பிடவே நான் இங்கு அழைத்து வந்தேன்” என்று கூறி அதன் மேல் பாயத் தயாரானது. கண்ணிமைக்கும் நேரத்தில் முள்ளம்பன்றி நரி மேல் பாய்ந்து தன் முட்களால் காயப்படுத்தியது. அதனை சற்றும் எதிர்பார்த்திராத நரி வலியால் துடித்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மான்குட்டி தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி போய் வீடு வந்தடைந்தது.
மான் குட்டியை காணாமல் அம்மா மான் தவித்துக் கொண்டிருந்தது. அம்மாவை ஓடிச்சென்று கட்டியணைத்த மான் குட்டி “அம்மா, என்னை மன்னித்து விடுங்கள். நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். உங்கள் பேச்சை கேளாமல் நான் பயப்பட வேண்டிய நரிக்கு பயப்படாமல் அதனுடன் நட்பாக பழகினேன். ஆனால் நரி இன்று என்னை உண்ணப் பார்த்தது. நீங்கள் பயப்படாதே என்று கூறியும் நான் பார்த்து பயந்த முள்ளம்பன்றி தான் இன்று என் உயிரை காப்பாற்றியது” என்று கூறி அழுதது.
“நல்லவேளை மகளே, இனியாவது பயப்பட வேண்டிய விஷயத்திற்கு மட்டும் பயப்படு. தேவையில்லாத விஷயங்களுக்கு பயப்படாதே” என்று அம்மா மான் அறிவுரை கூறியது. அன்றிலிருந்து மான்குட்டி எல்லாவற்றையும் பார்த்து பயப்படுவதில்லை. பிறகு மான் குட்டியும் முள்ளம் பன்றியும் சிறந்த நண்பர்களாக வாழ்ந்தனர்.
குழந்தைகளா, நாமும் இது போல எல்லாவற்றையும் கண்டு பயப்படாமல் இருக்க வேண்டும். அதேசமயம் பயப்பட வேண்டிய விஷயங்களுக்கு நிச்சயம் பயப்படவேண்டும்.
குழந்தைகள் கதையை கேட்டு மகிழ:
https://anchor.fm/athila-nabin/episodes/–ek7lt9
Discussion about this post