குறள் #108
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் (Gratitude)
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
விளக்கம்:
ஒருவன் செய்த நன்மையை ஒருபோதும் மறத்தலாகாது; அவன் செய்த தீமையை உடனே மறப்பது நல்லது.
Translation:
‘Tis never good to let the thought of good things done thee pass away;
Of things not good, ’tis good to rid thy memory that very day.
Meaning:
It is not good to forget a benefit; it is good to forget an injury even in the very moment (in which it is inflicted).
Transliteration:
Nandri Marappadhu Nandrandru Nandralladhu
Andre Marappadhu Nandru.
ஷாம்
ஷாமை அவனது நண்பர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் அவன் நண்பர்களுக்காக எதையும் செய்வான். அனைவரிடமும் அன்புடனும் கனிவுடனும் பழகுவான். படிப்பிலும் படு சுட்டி. மிதிவண்டி போட்டியில் அவனை வெல்ல ஆளே கிடையாது. தொடர்ந்து மூன்று வருடங்களாக அவன்தான் மாவட்ட அளவில் வேகமாக மிதிவண்டி ஓட்டுதல் போட்டியில் முதல் மாணவனாக வந்தான்.
கல்வியாண்டு தொடங்கி சில வாரங்கள் கழித்தே ஷாம் வகுப்பில் வந்து சேர்ந்தான் ரஞ்சன். ரஞ்சன் எல்லாவற்றிலும் தானே முதலாக வரவேண்டும் என்று எண்ணுபவன். தான் வெற்றி பெறுவதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிபவன். வந்தது முதலே வகுப்பில் யாருடனும் நட்பாக பழகாமல் தலை கணத்துடன் இருந்தான். அதனால் வகுப்பு மாணவர்கள் அவனுடன் பேச தயங்கினர். ஆனால் காலாண்டு பரீட்சை நெருங்கவே, ரஞ்சன் வலியச் சென்று வகுப்பு மாணவர்களிடம் பேசி தான் வகுப்பில் சேர்வதற்கு முன்பாக ஆசிரியர் நடத்திய பாடங்களின் குறிப்புகள் கேட்டான். மற்ற மாணவர்கள் தயங்கி யோசித்துக் கொண்டிருக்கும் போதே, ஷ்யாம் தன் புத்தகங்களைக் கொடுத்து உதவினான்.
அந்த காலாண்டு பரிட்சையில் வகுப்பில் முதல் மாணவனாக ரஞ்சனும் இரண்டாம் மாணவனாக ஷாமும் வந்தனர். ரஞ்சனுக்கு மேலும் தற்பெருமை ஏறியது. ஷாமின் நண்பர்களிடம் சென்று “இனிமேல் எல்லாவற்றிலும் நான் தான் முதல் மாணவனாக வருவேன்” என்று அலட்டிக் கொண்டான். அதைக் கண்டு எரிச்சலடைந்த அவர்கள் “உன்னால் ஷாமை மிதிவண்டி போட்டியில் ஜெயிக்கவே முடியாது” என்று சவால் இட்டனர்.
அதனால் ரஞ்சன் கடுமையான மிதிவண்டி பயிற்சி மேற்கொண்டான். எனினும், பயிற்சிப் போட்டியில் ஷாம் தன்னை காட்டிலும் சிறப்பாக இருப்பதை கண்டு பொறாமை கொண்டான். குறுக்கு வழியிலேனும் அவனை வென்றுவிட வேண்டும் என்று நினைத்தான். அன்று பள்ளி அளவில் மிதிவண்டி போட்டி; அதில் வெற்றி பெறுபவர்கள் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் தங்களது பள்ளி சார்பாக கலந்து கொள்வர். தனது பன்னிரண்டாவது பிறந்தநாளுக்கு பெற்றோர் பரிசாக அளித்த புதிய மிதிவண்டி உடன் அசத்தலாக வந்து நின்றான் ஷாம். அவன் அருகில் ரஞ்சன் தனது மிதிவண்டியில் போட்டி தொடங்க தயாராக நின்றான். ஷாம் தனது சக போட்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு போட்டி ஆரம்பித்ததும் வேக வேகமாக தனது மிதிவண்டியை ஓட்டத் தொடங்கி முதல் நிலையில் வந்து கொண்டிருந்தான். ஆனால் சிறிது நேரத்திலேயே தன் மிதி வண்டியின் சக்கரத்தில் காற்று இறங்கி அவனால் வேகமாக ஓட்ட இயலாததை உணர்ந்தான். அவனை முந்திச் சென்ற ரஞ்சன் அவனை ஏளனமாக பார்த்து சிரித்து சென்றது ஷாமுக்கு ஏதோ போல் இருந்தது. போட்டியின் இறுதியில் ரஞ்சனே வெற்றி பெற்றான். ஷாம் தனது மிதிவண்டி சக்கரத்தில் சில ஆணிகள் குத்தி இருப்பதை கண்டான். சந்தேகப்பட்டு ரஞ்சனின் பையை சோதனை செய்தபோது புதிய ஆணிகள் வாங்கியிருந்த பெட்டியைக் கண்டான். ஷாமுக்கு இது அதிர்ச்சியாக இருந்தாலும் யாரிடமும் அதைக் கூறவில்லை.
இரண்டு வாரங்கள் கழித்து மாவட்ட அளவிலான போட்டி நடைபெற்றது. அந்த வருடம் அவன் பள்ளி சார்பாக ரஞ்சன் கலந்து கொண்டான். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன் ரஞ்சனின் மிதிவண்டி பழுதாகி விட்டது. அவனுக்கு அழுகையாக வந்தது. தான் வெற்றி பெறுவதற்காக ஷாமின் பந்தய பாதையில் ஆணி வைத்ததற்கான தண்டனைதான் இது என்பதை உணர்ந்தான். அவ்வாறு அவன் வருந்திக் கொண்டிருக்கும் போதே ஷாம் ரஞ்சனுக்கு வாழ்த்துக் கூற அங்கு வந்தான். ரஞ்சனின் மிதிவண்டி பழுதாகி அவன் வருத்தப்படுவதை அறிந்த அவன், உடனே தனது மிதிவண்டியைக் கொடுத்து “இந்தா ரஞ்சன், எனது மிதிவண்டியை சரி செய்து விட்டேன். நீ இதை ஓட்டி போட்டியில் வென்று வா” என்று கொடுத்தான்.
ஷாம் பாடப்புத்தகங்கள் கொடுத்து உதவியும், அந்த நன்றியை மறந்து தான் அவனுக்கு செய்த துரோகத்தை நினைத்து வெட்கப்பட்டான் ரஞ்சன். ஷாம் முன் உடைந்து அழுது “என்னை மன்னித்து விடு நண்பா, நான் தான் அன்று பள்ளியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெறுவதற்காக உன் பாதையில் ஆணிகள் வைத்தேன். தயவு செய்து என்னை மன்னித்துவிடு” என்று கெஞ்சினான். “அது எனக்கு அன்றே தெரியும், அதை மறந்தும் விட்டேன். இனிமேல் அவ்வாறு செய்யாதே. என்றுமே நேர்வழியில் வெல்வதுதான் உண்மையான வெற்றி. நிச்சயமாக நீ இந்தப் போட்டியில் வென்று நமது பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும்” என்றான். அதன்படி ரஞ்சனும் உத்வேகத்துடன் போட்டியிட்டு முதல் இடம் வந்தான். அந்த ஆண்டும் அவன் பள்ளியே சிறந்த பள்ளியாக வந்தது. அன்று ஷாம் செய்த உதவியை ரஞ்சன் வாழ்நாள் முழுவதும் மறக்கவே இல்லை.
ஆகவே குழந்தைகளா, நாமும் மற்றவர்கள் செய்த நல்ல விஷயங்களை என்றைக்கும் மறக்கக்கூடாது. அதனால் அதே சமயம் ஒருவர் செய்த கெட்ட செயல்களை உடனே மறந்து விடவேண்டும்.
குழந்தைகள் இக்கதையை கேட்க:
Discussion about this post